
தலைநகர் புது தில்லியின் பெரும்பாலான பகுதி மக்கள், சனிக்கிழமை அதிகாலையில், வானில் பிரகாசமாக எழுந்த பிழம்புகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான விடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு கருத்துகளும் வெளியாகியுள்ளது. வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் காணக்கிடைத்த அனுபவம் என்று பலரும் பகிர்ந்துள்ளனர்.
இந்த பிரகாசமான பிழம்பானது ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும், தில்லி மாநகர் முழுமைக்கும் அது வெளிச்சம் பாய்ச்சியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இது என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இது பற்றி தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், அமெரிக்க விண்கல் அமைப்பின் கூற்றுப்படி, பிரகாசமான விண்கல் எரிந்தபடி பூமிக்குள் விழுந்திருக்கலாம். அது எரிந்து துண்டு துண்டாக விழும்போது இந்த காட்சி தோன்றியிருக்கலாம் என்றும், அல்லது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக் கோள் குப்பைகள் அல்லது ராக்கெட் துண்டுகள் பூமிக்குள் விழுந்து எரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன. ஆனால், இந்த தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதனை நேரில் பார்த்த தெற்கு தில்லி மக்கள், ஒரு சில வினாடிகள்தான் இது நீடித்தது. ஆனால், எங்கள் வாழ்நாளில் இதனை மறக்கவே முடியாது என்று தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுபோன்ற எரிகல் அல்லது விண்வெளி குப்பைகள் பூமிக்குள் எரிந்தபடி நுழைவது சாதாரணமானது அல்ல, இது பெரு நகரங்களில் விழும்போது பேசுபொருளாகிறது என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.