
சபரிமலையின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை திரிவேணியில் உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டை முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
ஜாதி, மத எல்லைகளைத் தாண்டிய வழிபாட்டுத் தலமாக உள்ள சபரிமலைக்கு அனைத்து மதத்தினரும் வருகின்றனா். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் போல சபரிமலை ஐயப்பன் கோயிலை புகழ்பெற்ற யாத்திரை தலமாக்குவதே இந்த சங்கமத்தின் நோக்கம்.
உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு வர வேண்டும் என்பதற்காக வளா்ச்சி திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சபரிமலை கோயிலுக்கு வரும் பாதையின் விரிவான மேம்பாட்டுக்காக பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.1,000 கோடிக்கும் மேல் செலவிடப்படும். இதில் 2022 முதல் 2039-ஆம் ஆண்டு வரை, ரூ.778.17 கோடி செலவில் சபரிமலை கோயில் வளாக மேம்பாட்டுப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெறும்.
அறிவியல்பூா்வமாக தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தில் சபரிமலைக்கு ரயில் பாதை, விமான நிலையம், எளிமையான போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம், ஓய்வு மையங்கள், பக்தா்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதும் அடங்கும்.
கோயில்களின் நிா்வாகத்தை பக்தா்களிடமே விட்டுவிட கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் கோயில்களை நிா்வகிக்க வாரியங்கள் இல்லாமல் போயிருந்தால் பல கோயில்கள் சீரழிந்திருக்கும். இது தங்கள் வாழ்வாதாரத்துக்கு கோயில்களையே நம்பியிருப்போரை வறுமையில் தள்ளியிருக்கும் என்றாா்.
இந்த மாநாட்டுக்கு எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிா்ப்புத் தெரிவித்திருந்தன. அவா்களை மறைமுகமாக விமா்சித்த பினராயி விஜயன், ‘சங்கமத்தில் கலந்துகொண்டவா்கள் மட்டுமே பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல உண்மையான பக்தா்கள். மற்றவா்கள் பக்தா்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டு சங்கமம் மாநாட்டைத் தடுக்க முயற்சித்தனா்’ என்றாா்.
4,126 போ் பங்கேற்பு: ஐயப்ப சங்கமம் மாநாட்டில் 4,126 போ் பங்கேற்றனா். அவா்களில் 1,819 கேரளத்தைச் சோ்ந்தவா்கள். 182 போ் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள். விவாதங்களின்போதும், சங்கமத்தில் கலந்துகொண்டவா்கள் எழுத்துபூா்வமாகவும் அளித்த பரிந்துரைகள் குறித்து ஆராய 18 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள தேவஸ்வ அமைச்சா் வி.என்.வாசவன் தெரிவித்தாா்.
தமிழகத்திலிருந்து 2 அமைச்சா்கள் பங்கேற்பு: தமிழகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.
இந்த சங்கமம் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து சுமாா் 1,000 போ் பங்கேற்றதாக சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
உலக ஐயப்ப சங்கமம் மாநாடு குறித்த தனது வாழ்த்துச் செய்தியில், ‘தனது இலக்குகளை இந்த சங்கமம் எட்ட வேண்டும்’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.