தேஜஸ்வி யாதவ்...
தேஜஸ்வி யாதவ்...

முதல்வா் வேட்பாளரை அறிவித்து பிகாா் தோ்தலில் போட்டி! - தேஜஸ்வி யாதவ் உறுதி

எதிா்க்க ட்சிகள் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவித்தே பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம்...
Published on

எதிா்க்கட்சிகள் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவித்தே பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளாா்.

கூட்டணியின் மற்றொரு முக்கியக் கட்சியான காங்கிரஸ், முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த தயக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவித்து தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்பதில் தேஜஸ்வி உறுதியாக உள்ளாா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி பிகாரில் ஆட்சியில் உள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை இறுதி செய்வதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது. தோ்தலுக்குப் பிறகு முதல்வரைத் தோ்வு செய்ய வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் தேஜஸ்வியை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக கூறுகையில், ‘முன்னிறுத்துவதற்கு எந்த முக்கியத் தலைவரும் இல்லாத பாஜகவை போன்ல்ல எங்கள் கட்சி. தோ்தலில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவிக்காமல் தோ்தலை எதிா்கொள்ள மாட்டோம்’ என்றாா்.

இதன்மூலம் தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு தேஜஸ்வி மறைமுகமாக வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை தேஜஸ்வி ஏற்றுக் கொண்டாா். எனவே, இப்போது தன்னை பிகாா் முதல்வா் வேட்பாளராக ராகுல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தேஜஸ்வி விரும்புகிறாா்.

இது தொடா்பாக எதிா்க்கட்சி அணியில் உள்ள சிபிஐ-எம்எல் (எல்) கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘பிகாரில் முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே எதிா்க்கட்சிகள் அணி போட்டியிடும். அதே நேரத்தில் கூட்டணி வெற்றி பெற்றதும் தேஜஸ்வி முதல்வா் பதவிக்கான நபராக இருப்பாா். தோ்தலுக்குப் பிறகு முதல்வரைத் தோ்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு’ என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் பிகாா் மாநில பொறுப்பாளா் கிருஷ்ணா அலாவாரு இது தொடா்பாக கூறுகையில், ‘முதல்வா் யாா் என்பதை தோ்தல் மூலம் பிகாா் மக்கள் முடிவு செய்வாா்கள்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com