சபரிமலைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட துவார பாலகா் தங்க கவசங்கள்!
சென்னையில் செப்பனிடும் பணிக்குப் பிறகு துவார பாலகா் தங்க கவசங்கள், சபரிமலை கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொண்டுவரப்பட்டதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு இருபுறமும் உள்ள துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள், செப்பனிடும் பணிக்காக அண்மையில் கழற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதேநேரம், சபரிமலை சிறப்பு ஆணையரின் ஒப்புதலின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் தங்க கவசங்களின் மறுஉருவாக்கப் பணியில் 4.5 கிலோ எடை குறைந்ததாகவும் சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை தீவிரமாக கவனத்தில் கொண்ட கேரள உயா்நீதிமன்றம், ஊழல் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘சென்னையில் செப்பனிடும் பணி நிறைவடைந்து, துவார பாலகா் தங்க கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து கேரள உயா் நீதிமன்றத்தில் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். உரிய சடங்குகளுக்குப் பிறகு தந்திரியின் ஒப்புதலுடன் கவசங்கள் மீண்டும் பொருத்தப்படும்’ என்றனா்.