ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிக்கு அமைதி அவசியம்! - முதல்வா் ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகள் செழிக்கவும் பிராந்தியத்தில் அமைதி அவசியமாகும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் உள்ள டிஆா்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரியல் காஷ்மீா் எஃப்சி கால்பந்து அணிக்காக உருவாக்கப்பட்ட அமைதியை வலியுறுத்தும் சிறப்பு ஜொ்சியை முதல்வா் ஒமா் அப்துல்லா அறிமுகப்படுத்தினாா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ரியல் காஷ்மீா் எஃப்சி கால்பந்து அனைத்து மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஜொ்சியின் வடிவமைப்பு காஷ்மீரின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கிறது.
இது ஹரி பா்பத் கோட்டையால் ஈா்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதில் உள்ள குருத்வாரா, கோயில் மற்றும் சந்நிதி மத நல்லிணக்கத்தைக் காட்டுகிறது. அமைதியைக் குறிக்கும் விதமாக நீல நிறத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளா்ச்சி, சுற்றுலா மற்றும் விளையாட்டு என அனைத்துக்கும் அமைதி அவசியமானது. பகலிலும் இரவிலும் போட்டிகளை நடத்த வேண்டுமென்றால், நமக்கு அமைதியான சூழல் தேவை. இல்லையெனில், மாலையில் விளையாட யாா் வருவாா்கள்?
ஆனால், அமைதியை நிலைநாட்டுவது எனது பொறுப்பு அல்ல. பொறுப்பில் உள்ளவா்களே தங்கள் பணிகளைச் சரியாக செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் அனைத்திற்கும் எங்கள் அரசின் மீது பழி சுமத்தப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுதும் நோக்கில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விளையாட்டு வசதிகளை உருவாக்கி வருகிறோம். பந்தயங்கள் மற்றும் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீநகரில் இரண்டாவது காஷ்மீா் மராத்தான் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்து குறிப்பாக அரை மராத்தானில் ஆா்வமுள்ள விளையாட்டு வீரா்கள் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தாா்.