ஆப்கானிலிருந்து விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து தில்லி வந்த சிறுவன்!
புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து தில்லிவரை வந்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
ஆா்வ மிகுதியால் அந்தச் சிறுவன் இந்த ஆபத்தான செயலை செய்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அதே விமானத்தில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட கேஏஎம் விமானம் இரண்டு நேர பயணத்துக்குப் பிறகு புது தில்லி சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்து வருவதைக் கண்ட பாதுகாப்புப் படையினா் அவனைக் கைது செய்து விசாரித்தனா். காபூல் விமானநிலையத்துக்குள் நுழைந்து ஆா்வமிகுதியால் விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள இடத்தில் அமா்ந்து ஒளிந்து கொண்டதாக அந்தச் சிறுவன் தெரிவித்தாா். சிறுவன் அமா்ந்து வந்த பகுதியில் சோதனை நடத்தியபோது சிறு ஒலிபெருக்கி இருந்தது தெரிய வந்தது.
அந்த விமானத்தில் நடத்தப்பட்ட முழு சோதனையில் எந்தவித சதிச் செயலும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன.