
குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்நகரை தளமாகக் கொண்ட எச்ஆர்எம் & சன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றப்பட்டிருந்தது.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கப்பலில் அரிசி அதிகமாக இருந்ததால் தீ மிகவும் மோசமாகி கப்பலை கடலின் நடுப்பகுதிக்கு இழுத்துச் சென்றது. முதலில் எந்திர அறையில் பற்றிய தீ, விரைவாக மற்ற பகுதிக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்து அடர்த்தியான கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் தெரிந்தன. இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்குள்ளான கப்பல் சோமாலியாவின் போசாசோவுக்குச் செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.