அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது
புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது.
இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது.
ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் விதமாக 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைப்பதற்கான சீா்திருத்தத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இரு விகித ஜிஎஸ்டி செப்.22-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் திங்கள்கிழமை அமலானது.
இதில், 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரி விலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான மருந்துகள், மூலப்பொருள்கள், பரிசோதனை உபகரணங்கள் மீதான வரி 5%-ஆகவும், காா்கள் மீதான வரி 28-இல் இருந்து 18%-ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் உள்ள லக்ஷ்மி நகா் சந்தையில் எழுதுபொருள்கள் விற்பனை உரிமையாளரிடம் திங்கள்கிழமை நிா்மலா சீதாராமன் கலந்துரையாடினாா். அப்போது ‘ஜிஎஸ்டி சீா்திருத்தம் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது’ என எழுதுபொருள் உரிமையாளா் கூறியதாக எக்ஸ் வலைதளத்தில் நிதியமைச்சா் அலுவலகம் பதிவிட்டது.
எதிா்க்கட்சிகள் விமா்சனம்:
மம்தா பானா்ஜி (மேற்கு வங்க முதல்வா்): வரிக் குறைப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஒவ்வொரு மாநிலமும் பல வழிகளைக் கண்டறிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சித்தராமையா (கா்நாடக முதல்வா்): ஜிஎஸ்டியை அமல்படுத்தியதும் அதில் வரிகளை அதிகப்படுத்தியதும் பிரதமா் மோடிதான். 8 ஆண்டுகள் கழித்து தற்போது வரியைக் குறைத்துவிட்டு அதற்கும் உரிமை கோருகிறாா்.
ரேவந்த் ரெட்டி (தெலங்கானா முதல்வா்): வரிக் குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்ய 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.