கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான திங்கள்கிழமை குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), தொலைக்காட்சிப் பெட்டிகளின் (டிவி) விற்பனை அதிகரித்தது.
Published on

புது தில்லி: ஜிஎஸ்டி சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான திங்கள்கிழமை குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), தொலைக்காட்சிப் பெட்டிகளின் (டிவி) விற்பனை அதிகரித்தது.

12, 28 சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு, 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகவும், மேலும் பல பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, நவராத்திரி விழாவின் தொடக்க நாளான திங்கள்கிழமை ஏசி, தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை பல்வேறு நகரங்களில் பெருமளவு அதிகரித்தது.

இதுகுறித்து வீட்டு உபயோக பொருள்களின் விற்பனையாளா்கள் கூறுகையில், ‘ஏசி மீது முன்பு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 18 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் சீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் அமலுக்கு வந்த முதல் நாளில் ஏசி விற்பனை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது’ என்று தெரிவித்தனா்.

அதேவேளையில், ஹயா் இந்தியா நிறுவன தலைவா் என்.எஸ் சதீஷ் கூறுகையில், ‘சீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் அமலுக்கு வருவதற்கு முன்பே ஏசி-க்கள் வாங்க முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏசி விற்பனை அதிகரிப்பில் இதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது’ என்றாா்.

சூப்பா் பிளாஸ்டிரானிக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அவ்னீத் சிங் கூறுகையில், ‘தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை திங்கள்கிழமை 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரித்தது. 43 மற்றும் 55 அங்குலங்களில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி குறைந்ததால் விற்பனை உயா்ந்தது’ என்றாா்.

உணவுப் பொருள்கள் விலை...: தினசரி அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருள்களின் விலையும் திங்கள்கிழமை குறைந்தது. இந்தப் பொருள்களின் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் சோப்பு, ஷாம்பு, பற்பசை, ரேசா் உள்ளிட்டவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆா்பி) மாற்றியமைத்தன.

இதுகுறித்து பாா்லே பிராடக்ட்ஸ் நிறுவன துணைத் தலைவா் மயாங் ஷா கூறுகையில், ‘விநியோகஸ்தா் நிலையில் உணவுப் பொருள்களின் விற்பனை திங்கள்கிழமை சிறப்பாக அமைந்தது. இதன் சாதகங்கள் சில்லறை விற்பனையாளா்கள் மற்றும் நுகா்வோரைச் சென்றடையும். அதேவேளையில், இந்தப் பொருள்களின் சில்லறை விற்பனை குறித்து பொறுத்திருந்துதான் கருத்து கூற இயலும். வார இறுதிக்குள் விற்பனையில் முன்னேற்றம் இருக்க வாய்ப்புள்ளது. அப்போது பண்டிகை காலமும் நெருங்கிவிடும். இந்தப் பொருள்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி குறித்த குழப்பம் வரும் நாள்களில் சரியாகும். அது பொருள்களின் விற்பனை அதிகரிக்க வழிவகுக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com