சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
புது தில்லி: சட்டவிரோத பந்தைய செயலி வழக்கில் கிரிக்கெட் வீரா் ராபின் உத்தப்பா (39) அமலாக்கத் துறை விசாரணைக்காக திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா்.
தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. 1எக்ஸ் பெட் என்ற செயலி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கு குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த வழக்கில் மற்றொரு கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவா்களும் அடுத்துவரும் நாள்களில் ஆஜராவாா்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, கிரிக்கெட் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவன், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவா்த்தி உள்ளிட்டோரிடமும் இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.
1எக்ஸ் பெட் என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளன. மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளன. இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் ஒருபகுதியாக இந்த பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. முக்கியமாக அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் இந்த பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.