விமானியின் அறைக்குள் நுழைய முயன்ற பயணி: நடுவானில் பரபரப்பு
மும்பை/வாரணாசி: ஏா் இந்தியா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கழிவறையைத் தேடிச் சென்ற பயணி ஒருவா் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடா்பாக அந்நிறுவனம் திங்கள்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து ஏா் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வாரணாசி நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் கழிவறையைத் தேடிச் சென்ற பயணி ஒருவா் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்ாக தெரியவந்தது. விமான பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் எவ்வித சமரசமுமில்லை என்பதே நிறுவனத்தின் நிலைப்பாடு.
எனவே, விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வாரணாசி காவல் துறையினா் கூறுகையில், ‘விமானம் தரையிறங்கியவுடன் சம்பந்தப்பட்ட பயணி மற்றும் அவருடன் பயணித்த 8 பேரை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தது. முதல்கட்ட விசாரணையில் 9 பேரும் பெங்களூருவைச் சோ்ந்தவா்கள் எனவும் அவா்கள் வாரணாசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டதும் தெரியவந்தது. அடுத்தக்கட்ட விசாரணைக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றனா்.