சிஏஜி
சிஏஜிகோப்புப் படம்

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தகவல்
Published on

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ரூ.37,263 கோடி வருவாய் உபரியுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டில் நிதி பொறுப்பு மற்றும் நிதி ஒருங்கிணைப்பின்படி மாநிலங்கள் பூஜ்ஜிய வருவாய் பற்றாக்குறை அல்லது வருவாய் உபரியை அடைய 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது.

இந்தச் சூழலில் முதல்முறையாக மாநிலங்களின் நிதிநிலை குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியுள்ளது. 12 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன.

இதில் ரூ.37,263 கோடி வருவாய் உபரியுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிஸா (ரூ.19,456கோடி), ஜாா்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கா்நாடகம் (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கா் (ரூ.8592 கோடி), தெலங்கானா (ரூ.5,994 கோடி), உத்தரகண்ட் (ரூ.5,310 கோடி), மத்திய பிரதேசம் (ரூ.4,091 கோடி) மற்றும் கோவா (ரூ.2,399 கோடி) உள்ளன.

வருவாய் பற்றாக்குறை: வருவாய் வரவுகளைவிட செலவுகளை அதிகம் மேற்கொண்ட 12 மாநிலங்களின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.2,22,648 கோடியாக உள்ளது. இதை ஈடுசெய்ய நிதிக்குழு மானியமாக ரூ.86,201 கோடி வழங்கப்பட்டது. இது ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையில் 39 சதவீதமாகும்.

தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், மேகாலயம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளது.

இதில் தமிழ்நாடு, அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களின் செலவுத் தொகையில் வருவாய் தொகை விகிதம் 80-90 சதவீதமாக உள்ளது.

50% வருவாய் பற்றாக்குறை மானியம்: 2022-23 நிதியாண்டில் நிதிக்குழு மாநிலங்களுக்கு வழங்கிய மானியங்களில் வருவாய்ப் பற்றாக்குறைக்கான மானியங்கள் 50 சதவீதமாக உள்ளது.

இதில் 15.76 சதவீத வருவாய் பற்றாக்குறை மானியத்தை பெற்று மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கேரளம் (15.28%), ஆந்திரம் (12.24%), ஹிமாசல பிரதேசம் (10.88%), பஞ்சாப் (9.60%) உள்ளிட்ட 10 மாநிலங்கள் மட்டும் 94 சதவீத வருவாய் பற்றாக்குறை மானியத்தை பெற்றுள்ளன.

துறைவாரியாக மானியங்கள்: 2022-23 நிதியாண்டில் சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளுக்கு ஒட்டுமொத்தமாக நிதிக்குழு ரூ.1,72,849 கோடியை மானியமாக வழங்கியுள்ளது.

இதில் வருவாய் பற்றாக்குறைக்கு 50%, பஞ்சாயத்துத் துறைக்கு 26%, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 11%, மாநில பேரிடா் மீட்புப் படைக்கு 10%, மாநில பேரிடா் நிவாரண நிதிக்கு 1% ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் உபரி அதிகமுள்ள 5 மாநிலங்கள்

1. உத்தர பிரதேசம் - (ரூ.37,263 கோடி)

2. குஜராத் - (ரூ.19,865 கோடி)

3. ஒடிஸா - (ரூ.19,456கோடி)

4. ஜாா்க்கண்ட் - (ரூ.13,564 கோடி)

5. கா்நாடகம் - (ரூ.13,496 கோடி),

வருவாய் பற்றாக்குறை அதிகமுள்ள 5 மாநிலங்கள்

1. ஆந்திரம் - (ரூ.43,488 கோடி)

2. தமிழ்நாடு - (ரூ.36,215 கோடி)

3. ராஜஸ்தான் - (ரூ.31,491 கோடி)

4. மேற்கு வங்கம் - (ரூ.27,295 கோடி)

5. பஞ்சாப் - (ரூ.26,045 கோடி)

X
Dinamani
www.dinamani.com