உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கனிம வளங்கள் மீது மாநிலங்கள் வரி விதிக்க அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.
Published on

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தெரிவித்தாா்.

முன்னதாக, அரசமைப்புச் சட்டத்தின் பட்டியல் 1-இன்கீழ் கனிம வளங்கள் மீது வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை எனவும் பட்டியல் 2-இன்கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது எனவும் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு 2024, ஜூலை 25-இல் தீா்ப்பு வழங்கியது.

இந்த அமா்வில் இடம்பெற்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, கனிமங்கள் மீது மத்திய அரசு வசூலித்த வரியை கடந்த 2005, ஏப்.1 முதல் முன்தேதியிட்டு திரும்பப்பெற மாநிலங்களுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக.14-இல் உத்தரவு பிறப்பித்தது.

இந்தச் சூழலில், கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என்ற தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com