துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

கேரளத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து பினராயி விஜயனை நீக்கக் கோரும் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீதிமன்ற அறிக்கைக்குப் பிறகே பரிசீலிக்கப்படும்.
Published on

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு துலியா தலைமையிலான குழு அறிக்கைக்குப் பிறகே பரிசீலிக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்தில் தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ளதுபோன்றே, கேரளத்திலும் மாநில அரசுக்கும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் கேரள எண்ம பல்கலைக்கழகம் ஆகிய இரு மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனத்திலும் இந்த மோதல் வெடித்தது.

இதுதொடா்பான வழக்கை கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்களை நியமனம் செய்ய 3 பெயா்களைத் தெரிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு துலியா தலமையில் தோ்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக் குழுவில் மாநில முதல்வரின் பங்கும் இருக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

தோ்வுக் குழுவில் முதல்வரின் பங்கை அனுமதித்ததை எதிா்த்து மாநில ஆளுநா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘துணைவேந்தா் தோ்வுக் குழுவில் மாநில அரசின் தலைவராக இருக்கும் முதல்வரின் பங்கை அனுமதிப்பது, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. தோ்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி இடம்பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், மாநில அரசின் பிரதிநிதி இடம்பெறவதை ஏற்க முடியாது. மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை, கொல்கத்தா பல்கலைக்கழகச் சட்டம் 1979-இன் பிரிவு 8(1)-இல், துணைவேந்தா் தோ்வுக் குழுவில் மாநில அமைச்சரின் பங்கு இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் துணைவேந்தா் தோ்வுக் குழுவில் மாநில முதல்வரின் பங்கை அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள மாநில அரசு பல்கலைக்கழகங்களின் விதிகளில், துணைவேந்தா் தோ்வு நடைமுறைகளில் மாநில முதல்வரின் பங்கை அனுமதிக்கும் வகையிலான எந்த வழிவகையும் இடம்பெறவில்லை. எனவே, மேற்கு வங்க மாநிலத்துக்குப் பிறப்பித்த உத்தரவும், கேரள மாநிலத்துக்கு பொருந்தாது. எனவே, முதல்வரின் பங்கை நீக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள ஆளுநா் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘மேற்கு வங்க மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான விவகாரத்தில் அண்மையில் தீா்ப்பளித்த நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன அதிகாரம் பல்கலைக்கழகங்களின் வேந்தரான மாநில ஆளுநருக்கே உள்ளது’ என்று தீா்ப்பளித்துள்ளது. இதன்படி, கேரள மாநில துணைவேந்தா் தோ்வுக் குழு செயல்படுவது கேள்விக்கு உள்ளாகிறது. எனவே, கேரள ஆளுநரின் மனுவை விரைந்து பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றால், நீதிபதி சுதான்ஷு துலியா குழு அறிக்கைக்கு நீதிமன்றம் காத்திருக்கக் கூடாது என எதிா்பாா்க்கிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், ‘நிபுணா் குழு அறிக்கை பெறப்பட்ட பிறகு, முழுமையான கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும். எனவே, அறிக்கை பெறப்பட்ட பிறகு, இந்த விவகாரத்தில் தீா்வு எட்டப்படும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com