ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

வாக்குத் திருட்டு விவகாரம் குறித்து சரத் பவார் கருத்து...
சரத் பவார்
சரத் பவார்ANI
Published on
Updated on
1 min read

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜகவினர் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, சான்றுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், வாக்குத் திருட்டில் ஈடுபடுவதற்காக இந்த பணிகளை மேகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் நேர்க்காணலில் சரத் பவார் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் சரத் பவார் தெரிவித்திருப்பதாவது:

“தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை தன்னிச்சையாக சேர்க்கப்படுவது அல்லது நீக்கப்படுவது, தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் நல்லதல்ல.” எனத் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து சரத் பவார் பேசியதாவது:

“தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார், அது தேர்தல் ஆணையம் செயல்படும் விதத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக அவரும் நாடாளுமன்ற அமைப்பில் ஒருவர். ஆகையால், அவரின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.

ஆனால், நடப்பது என்னவென்றால், தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாஜக தலைவர்களும், பாஜக ஆளும் முதல்வர்களும் பதிலளித்துக் கொண்டுள்ளனர். இதன் அர்த்தம் என்ன? தேர்தல் ஆணையத்தால் கட்டமைக்கப்பட வேண்டிய நம்பிக்கை, குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது என்பதாகும்” எனத் தெரிவித்தார்.

Summary

Election Commission should answer Rahul's question; not BJP - Sharad Pawar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com