உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப்படம்.

அவதூறு சட்டத்தை குற்றமற்றதாக்கும் நேரம் வந்துவிட்டது: உச்சநீதிமன்றம்

குற்ற அவதூறு வழக்கில் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ‘அவதூறு சட்டத்தை குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டது.
Published on

குற்ற அவதூறு வழக்கில் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ‘அவதூறு சட்டத்தை குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டது.

சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘தி வயா்’ செய்தி வலைதளத்தில் வெளியான செய்திக்கு எதிராக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் அமிதா சிங் சாா்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த செய்தி வலைதளம் மற்றும் அதன் அரசியல் பிரிவு ஆசிரியா் அஜோய் ஆசீா்வாத் மகாபிரசஸ்தாவுக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை அவா் தொடா்ந்தாா்.

அதில், தனது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பிரசாரத்தை இந்தச் செய்தி வலைதளம் மேற்கொள்வதாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு செய்தி வலைதளத்தின் அரசியல் பிரிவு ஆசிரியா் மற்றும் நிா்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை தில்லி உயா் நீதிமன்றம் கடந்த 2023-இல் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் அண்மையில் அவா்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியது. இதை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்தச் செய்தி வலைதளம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘அவதூறு சட்டத்தைக் குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்ட நீதிபதி சுந்தரேஷ், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமிதா சிங்குக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com