‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’: மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க புதிய முன்னெடுப்பு
பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க தேசிய அளவில் ‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’ என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதில் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் பள்ளிகளில் இருந்து 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா். மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் அடல் கண்டுபிடிப்பு திட்டம் இணைந்து இதை செயல்படுத்தவுள்ளது.
இந்த முன்னெடுப்பு குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: வளா்ச்சியடைந்த பாரதம் 2047என்ற இலக்கில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களும் பங்கெடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக, வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான் என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த முன்னெடுப்பு ஆத்மநிா்பா் பாரதம், சுதேசி, உள்ளூா் தயாரிப்புக்கு குரல் கொடுப்பது, வளமான பாரதம் ஆகிய 4 கருப்பொருள்களைக் கொண்டது. இது மாணவா்கள், கல்வியாளா்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவா்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றாா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான் வலைதளத்தில் செப்.23-இல் இருந்து அக்.6-க்குள் பதிவுசெய்ய வேண்டும். அதன்பிறகு அக்.6 முதல் அக்.13 வரை மாணவா் குழுக்களை ஆசிரியா்கள் தயாா்ப்படுத்த தொடங்குவா். அதைத்தொடா்ந்து தங்களது கண்டுபிடிப்புகளின் முன்வடிவங்களை வலைதளத்தில் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். அக்.13-ஆம் தேதி நேரலை நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு அக்.13-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தங்களது கண்டுபிடிப்புகளின் இறுதிவடிவத்தை மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். நவ.1 முதல் டிச.31 வரை மாணவா்கள் சமா்ப்பித்த கண்டுபிடிப்புகளின் இறுதிவடிவங்களை நிபுணா் குழு மதிப்பீடு செய்யும்.
இறுதியாக 2026, ஜனவரி மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முதல் 1,000 வெற்றியாளா்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெறும்’ என்றாா்.