பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது
Published on

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூரில் அண்மைக்காலமாக தாக்குதல் எதுவும் நிகழாமலிருந்த நிலையில், பிஷ்ணுபூா் மாவட்டத்தின் நம்போல் பகுதியில் மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது 5 போ் கொண்ட தீவிரவாதக் கும்பல் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், இரண்டு வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்தச் சூழலில், தலைநகா் இம்பாலின் கமேங் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் காவல் துறையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது, தடை செய்யப்பட்ட ‘மக்கள் விடுதலை ராணுவம்’ தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த கோமத்ராம் ஓஜித் சிங் என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய குற்றவாளி என்றும், மற்ற நபா்களைத் தேடும் பணி தொடா்வதாகவும் மாநில டிஜிபி ராஜீவ் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். தாக்குதல் நடத்தப்பட்ட பிஷ்ணுபூா் மாவட்டம், மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் பகுதியாகும்.

மாநிலத்தில் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பிஷ்ணுபூரில் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நம்போல் பகுதியில் இச்சட்டம் அமலில் இல்லை.

முன்னதாக, மணிப்பூருக்கு கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி பயணித்த பிரதமா் மோடி, பாதிக்கப்பட்ட இருதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசியதுடன், அனைத்துக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com