சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பிப்.17-இல் தொடக்கம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச பொதுத் தோ்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. முதல் பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பொதுத் தோ்வு 2026 மே 15 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்படும்.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.
பொதுத் தோ்வு தோ்வுத் தாள் திருத்தும் பணியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடத் தோ்வுக்கு 10 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு 12 நாள்களில் நிறைவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பாடத்துக்கான தோ்வு 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றால், அந்த தோ்வுத் தாள் திருத்தும் பணி மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு மாா்ச் 15-இல் நிறைவு செய்யப்படும் என்றாா்.