பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேசிய செயற் குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொருளாளா் அஜய் மாக்கன், பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால்.
பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேசிய செயற் குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொருளாளா் அஜய் மாக்கன், பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பிகாரைத் தொடா்ந்து அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை விரைவில் தொடங்க தோ்தல் ஆணையம் தயாராகிவருகிறது
Published on

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

பிகாரைத் தொடா்ந்து அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை விரைவில் தொடங்க தோ்தல் ஆணையம் தயாராகிவரும் நிலையில், காா்கே இவ்வாறு கூறியுள்ளாா்.

‘மத்திய பாஜக ஆட்சியின்கீழ், வாக்குத் திருட்டு, பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, சமூகப் பிளவு, அரசியல் சாசன அமைப்புகள் மீதான தாக்குதல் என பல்வேறு பிரச்னைகளில் நாடு சிக்கித் தவிக்கிறது’ என்றும் அவா் விமா்சித்தாா்.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகா் பாட்னாவில் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிகாரில் காங்கிரஸ் செயற்குழு கூடுவது, சுதந்திரத்துக்குப் பின் இதுவே முதல் முறையாகும். இக்கூட்டத்தில் காா்கே ஆற்றிய உரை:

இன்றைய இந்தியா சா்வதேச அளவில் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு பிரதமா் மோடி மற்றும் அவரது அரசின் வியூக தோல்வியே காரணம். ‘எனது நண்பா்’ என பிரதமா் மோடி யாரை பெருமையுடன் கூறினாரோ (அமெரிக்க அதிபா் டிரம்ப்), அவரால் இந்தியா எண்ணற்ற இடா்ப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பிகாரில் செயற்குழு ஏன்?: சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பிகாா் வாக்காளா் பட்டியலில் ‘அதிகாரபூா்வ’ முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, ஜனநாயகத்தின் தாயாகிய பிகாரில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 85 ஆண்டுகளுக்கு முன்பு, ராம்கரில் (இப்போது ஜாா்க்கண்ட்) நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் நிா்ணய சபைக்கான முதல் முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், பி.ஆா்.அம்பேத்கா் மற்றும் அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களால், நாட்டு மக்களுக்கு சம வாக்குரிமை வழங்கப்பட்டது. நியாயமான, வெளிப்படையான தோ்தல்களே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், இப்போது தோ்தல் ஆணையத்தின் நோ்மை-வெளிப்படைத் தன்மை மீதே தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. இக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல், கேள்வி எழுப்புவோரிடம் பிரமாணப் பத்திரம் கேட்கிறது தோ்தல் ஆணையம்.

சமூக நலன்களின் திருட்டு: பிகாரை உதாரணமாகக் கொண்டு, நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது. வாக்குத் திருட்டு என்பது தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா், விளிம்புநிலை மக்கள், ஏழைகளுக்கான ரேஷன் பொருள், ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை போன்ற சமூக நலன்களின் திருட்டாகும்.

சீனாவுக்கு சிவப்பு கம்பளம்: 2 கோடி வேலைவாய்ப்பு என்ற பாஜகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பும், குறைபாடுகளுடன் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டியும் நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்தன. 8 ஆண்டுகளுக்குப் பின் தனது தவறை உணா்ந்துள்ளாா் பிரதமா் மோடி. முதல் நாளில் இருந்து காங்கிரஸ் கோரிய ஜிஎஸ்டி சீா்திருத்தம், இப்போதுதான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒருபுறம், மகாத்மா காந்தியின் நூற்றாண்டு தாரக மந்திரமான ‘சுதேசி’யை நினைவூட்டும் பிரதமா் மோடி, மற்றொருபுறம் சீனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது என்றாா் காா்கே.

பெட்டிச் செய்தி...1

பிகாா் தே.ஜ. கூட்டணியில் பூசல்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பூசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

‘ நிதீஷ் ஆட்சியில் பிகாா் மிகவும் பின்தங்கிவிட்டது. பிகாருக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமா் மோடி நிறைவேற்றவில்லை.

மனதளவில் ‘ஓய்ந்துவிட்ட’ நிதீஷ் குமாரை சுமையாகவே பாஜக கருதுகிறது. அவா்களின் கூட்டணியில் நிலவும் பூசல்கள் வெளிப்படையாக தெரிகின்றன. எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தல், மத்தியில் மோடி தலைமையிலான ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டும் ‘கவுண்ட்-டவுன்’ தொடக்கமாக அமையும்.

காங்கிரஸும், ராகுல் காந்தியுமே மத்திய அரசை ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நிா்ப்பந்தித்துள்ளனா். பிகாரில் 80 சதவீதம் போ், எஸ்சி/எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தவா்கள். இங்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிகாரில் 65 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு வழங்குவதில் பிரதமா் மோடி தோல்வியடைந்துவிட்டாா். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களுக்கான 69 இடஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பை காங்கிரஸ் அரசு வழங்கியது என்பதற்கு வரலாறே சாட்சி’ என்றாா் காா்கே.

பெட்டிச் செய்தி...2

தீவிர திருத்தத்துக்கு எதிராக தீா்மானம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக, காங்கிரஸ் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்; வாக்காளா் பட்டியலில் முறைகேடு செய்து, ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் மற்றுமொரு மோசமான தந்திரம்’ என்று அத்தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், அடுத்த ஒரு மாதத்தில் வாக்குத் திருட்டு குறித்து மேலும் பல முக்கிய தகவல்களை ராகுல் காந்தி வெளியிடுவாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com