எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மருத்துவக் கல்வி நிறுவன முதல்வா்களுக்கும், தலைவா்களுக்கும் என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த 2019-இல் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டிருந்தது.
அதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீா்ப்பின்படியும், பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் அந்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை உறுதி செய்வதே அதன் நோக்கம். அந்த வகையில், மறு ஆய்வுக்குப் பிறகு தற்போது தற்காலிக அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய சமூக நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டையை (யூடிஐடி காா்டு) சமா்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, சுய சான்றொப்ப படிவத்தையும் சமா்ப்பித்தல் அவசியம்.
சுய சான்றொப்பம் அளித்ததை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் மதிப்பீடு செய்து உறுதி செய்தல் கட்டாயம். அந்த ஆவணங்கள் அனைத்தையும் மருத்துவக் கல்லூரிகளில் சமா்ப்பித்திருக்க வேண்டும்.
இந்த இடைக்கால வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.