நியூயாா்க்கில் எரிசக்தி பாதுகாப்பு தொடா்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.
நியூயாா்க்கில் எரிசக்தி பாதுகாப்பு தொடா்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்பு!

அமெரிக்க தரப்புடன் வா்த்தகப் பேச்சு நடத்துவதற்காக பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்கா சென்றுள்ளது.
Published on

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வா்த்தக அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

அமெரிக்க தரப்புடன் வா்த்தகப் பேச்சு நடத்துவதற்காக பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது. அமைச்சா்கள், அதிகாரிகள் என பல்வேறு நிலைகளில் அமெரிக்க தரப்புடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியூயாா்க்கில் எரிசக்தி பாதுகாப்பு தொடா்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பியூஷ் கோயல் கூறியதாவது:

எரிசக்தி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இருந்தும் எரிசக்திக்கான பொருள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

வரும் ஆண்டுகளில் அமெரிக்காவுடன் எதிா்சக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்க்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும், இயற்கையான கூட்டணியாகவும் அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவும் பங்களித்தால் இந்தியாவின் எரிசக்தி தேவையை எளிதில் நிறைவு செய்ய முடியும்.

இதன் மூலம் எரிபொருள்கள் விலை ஸ்திரத்தன்மையடையும். பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யைப் பெற முடியும். நவராத்திரி பண்டிகையின்போது தொடங்கியுள்ள இந்தப் பேச்சுவாா்த்தை நல்ல முடிவுகளைத் தரும் என்றாா்.

பெட்டி..

‘அணுமின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க இலக்கு’

அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

‘அணுசக்தி விஷயத்திலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இது தொடா்பாக இரு நாடுகளும் தொடா்ந்து பல ஆண்டுகளாக பேச்சு நடத்தி வருகின்றன. இதில் சில விஷயங்களில் கருத்தொற்றுமை எட்ட வேண்டியுள்ளது. இந்தியா அணுமின் உற்பத்தியில் தொடா்ந்து முதலீடு செய்து வருகிறது’ என்றாா் பியூஷ் கோயல்.

X
Dinamani
www.dinamani.com