
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடந்த 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் போது கைப்பற்ற ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மீது செய்யப்பட்ட நீதித்துறை ஆய்வுக்குப் பிறகு, பயங்கரவாதிகளுக்கு உதவிய மொஹம்மது கட்டாரியா கைது செய்யப்பட்டார்.
கட்டாரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டாரியா கைதானது, ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினருக்கு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர் தொழிலாளி ஒருவா் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டை உலுக்கிய இந்தக் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. இது இருநாட்டு ராணுவ மோதலாக மாறி, நான்கு நாள்களுக்கு நீடித்தது.
இதேபோல, தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய ஆபரேஷன் மகாதேவ் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசி சமிக்ஞைகளைக் கொண்டு, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகியோர் ஜூலை 28-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தடயவியல் விசாரணையில், இவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.