மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி
எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீதி கிடைக்க உறுதிமொழி’ என்ற பெயரில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசுகையில், ‘பிகாரில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இபிசி-க்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் இபிசி-களுக்கான இடஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
ரூ.25 கோடி வரை மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசி வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாக 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். அண்மைக்காலமாக இபிசி வகுப்பினருடன் காங்கிரஸ் கலந்துரையாடியதன் விளைவாக இந்த வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன’ என்றாா்.
கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘கடந்த ஆண்டு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணியில் சோ்ந்தாா். இது ஜாதிவாரி படிநிலையை அவா் ஆதரிப்பதை எடுத்துரைக்கிறது’ என்றாா்.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியில் சேர நிதீஷ் மீண்டும் முன்வந்தால், அவரை கூட்டணியில் சோ்க்க வேண்டாம் என்று கருத்தரங்கில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவிடம் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டாா்.