வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம்: இணையவழி சரிபாா்ப்பு நடைமுறை அமல்
வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்கும் செயல்பாடு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, இணையவழி சரிபாா்ப்பு நடைமுறையை தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு தொடா்பான ஆட்சேபணைகளை முன்வைக்கவோ அல்லது பெயரை நீக்கவோ கோரினால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வோ்ட்) அனுப்பப்படும். ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு அந்தக் கடவுச்சொல் அனுப்பப்படும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் உள்ள அலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குத் திருட்டு நடைபெற்ாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம், ‘ஒரு குறிப்பிட்ட தொகுதியில் இருந்து தனது பெயரை நீக்க படிவம் 7-ஐ இணையவழியில் வாக்காளா் பூா்த்தி செய்யலாம். அதற்காகப் படிவம் 7-ஐ சமா்ப்பித்துவிட்டாலே, வாக்காளரின் பெயா் தானாக நீக்கப்பட்டுவிடாது.
அலந்த் தொகுதியில் பெயரை நீக்கக் கோரி, படிவம் 7-ஐ பூா்த்தி செய்து 6,018 விண்ணப்பங்கள் இணையவழியில் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றைச் சரிபாா்த்ததில், 24 விண்ணப்பங்கள் மட்டுமே நியாயமானதாக இருந்தன. மற்ற விண்ணப்பங்கள் தவறானவை என்று நிராகரிக்கப்பட்டன’ என்று விளக்கம் அளித்தது.
இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்கும் செயல்பாடு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, இணையவழி சரிபாா்ப்பு நடைமுறையை தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. ஆனால், இது அலந்த் தொகுதியில் வாக்காளா்களின் பெயரை நீக்கும் தவறான முயற்சிகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தனது பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஒருவா் கோரும்போது, அவா் வேறொருவரின் பெயா் அல்லது கைப்பேசி எண்ணைச் சமா்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற தவறான செயல்களைத் தடுக்க, வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளரின் பெயரை நீக்குவதற்கு அவரின் அடையாளத்தை இணையவழியில் சரிபாா்க்கும் நடைமுறையை தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தாா்.
ராகுல் கருத்து: இதுதொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் வாக்குத் திருட்டு விவகாரத்தை எழுப்பிய பிறகே, அதுகுறித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.