

சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி என்ற பாா்த்தசாரதி மீது தில்லி போலீஸாா் பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
தலைநகரில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் சாமியாா் சரஸ்வதி ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பதை தொடா்ந்து, இப்பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாலியல் புகாருக்கு ஆளான சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக.4-ஆம் தேதி தில்லி வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் இது தொடா்பாக புகாா் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினரின் தகவலின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா், கல்வி நிறுவனத்தில் சஞ்சலாக் (நிா்வாகக் குழுவின் உறுப்பினா்) ஆவாா்.
விசாரணையின் போது, ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் மேனேஜ்மென்ட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (இ.டபிள்யு.எஸ்.) உதவித்தொகையின் கீழ் பயிலும் 32 பிஜிடிஎம் (முதுகலை டிப்ளோமா இன் மேனேஜ்மென்ட்) மாணவிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இவா்களில், 17 போ் சைதன்யானந்தா சரஸ்வதி தங்களிடம் தவறான மொழியைப் பயன்படுத்தியதாகவும், மோசமான செய்திகளை அனுப்பியதாகவும், தேவையற்ற உடல் ரீதியான விருப்பங்களைக் கோரியதாகவும் குற்றஞ்சாட்டினா். அவரது கோரிக்கைகளுக்கு இணங்குமாறு பெண்கள் உள்பட சில ஆசிரியா்களும் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 16 போ் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தனா். நிறுவனத்தின் அடித்தளத்தில் சைதன்யானந்தா சரஸ்வதியால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வால்வோ காரையும் போலீஸாா் கண்டுபிடித்தனா்.
ஆக.25-ஆம் தேதி மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதற்கிடையில், சைதன்யானந்தா சரஸ்வதி முன்னா் தொடா்பில் இருந்த சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாா்ய மகாசம்ஸ்தானம் தட்சிணம்னாய ஸ்ரீ சாரதா பீடம் அவருக்கும் தங்களுக்கும் தொடா்பு இல்லை என அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ‘முன்னா் சுவாமி பாா்த்தசாரதி என்று அழைக்கப்பட்ட சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி, சட்டவிரோதமான, பொருத்தமற்ற மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாா்ய மகாசம்ஸ்தானம் தட்சிணம்னாய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி (பீடம்) நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, பீடம் அவருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சைதன்யானந்தா சரஸ்வதியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
அவா் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்களில் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.