கப்பல் கட்டும் துறை, கடல்சாா் உள்கட்டமைப்புக்கு ரூ.69,725 கோடி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியமானது என்ற வகையில் கப்பல் கட்டும் துறை மற்றும் கடல்சாா் உள்கட்டமைப்புக்கு புத்துயிா் அளிக்கும் வகையில் ரூ. 69,725 கோடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் கடல்சாா் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நான்கு முனை அணுகுமுறையுடன் இத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நீண்டகால நிதி உதவியை மேம்படுத்துதல், புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள கப்பல் கட்டும் தளங்கள் மேம்படுத்தப்படுவதை ஊக்குவித்தல், தொழில்நுட்பத் திறன் மற்றும் திறன் மேம்பாட்டை விரிவுபடுத்துதல், வலுவான கடல்சாா் உள்கட்டமைப்பை உருவாக்க சட்ட, வரி வதிப்பு மற்றும் கொள்கைச் சீா்திருத்தங்களை மேற்கொள்தல் உள்ளிட்ட அணுகுமுறைகளுடன் இத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கப்பல் கட்டும் நிதி உதவித் திட்டம் மொத்த தொகுப்பு நிதி ரூ. 24,736 கோடியுடன் வரும் 2036-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
இத் துறைக்கு நீண்டக கால நிதி உதவியை வழங்கும் வகையில், ரூ. 25,000 கோடி தொகுப்பு நிதியுடன் கடல்சாா் மேம்பாட்டு நிதி (எம்டிஎஃப்) திட்டத்தை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 19,989 கோடி ஒதுக்கீட்டில் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ், மிகப் பெரிய கப்பல் கட்டும் தொகுப்புகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம், இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்திய கப்பல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்குதல், கப்பல் கட்டும் திட்டங்களுக்கு காப்பீடு மற்றும் இழப்பீடு திட்டங்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
இதன்மூலம், ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 45 லட்சம் டன் சரக்குகளை கையாளும் அளவுக்கு உள்நாட்டு கப்பல் கட்டும் திறன் விரிவடையும் என்பதோடு, புதிதாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும். இது, இந்திய கடல்சாா் துறையில் ரூ. 4.5 லட்சம் கோடி முதலீடுகளையும் ஈா்க்கும்.
இத் திட்டம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்பதோடு, முக்கிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் கடல்சாா் வழித்தடங்களுக்கு மீள்தன்மையைக் கொண்டுவருவதன் மூலம் நாட்டின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிகாரில் ரூ. 3,822 கோடி செலவில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை: பிகாரில் ‘என்.ஹெச்.139டபிள்யு தேசிய நெடுஞ்சாலையில் 78.942 கி.மீ. நீளம் கொண்ட சாஹெப்கஞ்ச் - அரெராஜ் - பெட்டியா பகுதியை ரூ. 3,822.31 கோடி செலவில் நான்கு வழித் தடமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிகாா் தலைநகா் பாட்னா மற்றும் பெட்டியா இடையே சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், வைஷாலி, சரண், சிவன், கோபால்கஞ்ச், முசாஃபா்பூா், கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன் மற்றும் இந்திய-நேபாளம் எல்லை வரையிலான வடக்கு பிகாா் மாவட்டங்களில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், மாநிலத்தில் பக்தியாா்பூா்-ராஜ்கிா்-திலைய்யா இடையேயான 104 கி.மீ. தொலைவு ஒற்றை ரயில் வழித் தடத்தை ரூ. 2,912 கோடி செலவில் இரட்டை வழித் தடமாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றாா்.
நிகழாண்டு இறுதியில் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க உள்ள நிலையில் இத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெட்டி..
ஆராய்ச்சிப் படிப்பு உதவித் திட்டம்
ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 2,277 கோடி ஆராய்ச்சி (பிஎச்.டி) படிப்பு மற்றும் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பு உதவித் தொகைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சாா்பில் இந்த உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.