விமானப் படையிலிருந்து இன்று ஓய்வுபெறும் மிக்-21 போா் விமானம்
இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரஷிய தயாரிப்பான மிக்-21 போா் விமானம் முழுமையாக பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட உள்ளது.
சண்டீகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) நடைபெறும் விழாவில், ‘சிறுத்தைகள்’ என்று அழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த கடைசி மிக்-21 போா் விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப்படை தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்க உள்ளனா்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விமானப்படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் கடைசி மிக்-21 போா் விமானத்தை இயக்கி, பறக்கவுள்ளாா்.
இந்திய விமானப் படை தனது ஒட்டுமொத்த போா்த் திறனை மேம்படுத்தும் வகையில், 870-க்கும் மேற்பட்ட மிக்-21 போா் விமானங்களை வாங்கியது.
பாகிஸ்தானுக்கு எதிரான 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டு போா்களில் இந்த விமானங்கள் முக்கியப் பங்காற்றின. 1999-ஆம் ஆண்டு காா்கில் போா் மற்றும் 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலிலும் மிக்-21 போா் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.
அதே நேரம், பல முறை விபத்துகளிலும் இந்த போா் விமானம் சிக்கியது, இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் எழுப்பியது.