உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

Published On :26 செப்டம்பர் 2025, 3:17 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநாடு செப். 21 முதல் செப். 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து அக்கட்சியைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

அக்கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவா்கள் 75 வயதைத் தாண்டியிருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள வரம்பைப் பின்பற்றி, பொதுச் செயலராக அவரை மீண்டும் தோ்வு செய்ய வேண்டாம் என்று பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா். அவா்களின் ஆட்சேபங்களை மீறி, பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘என்னைப் பொதுச் செயலராக மீண்டும் தோ்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது மிகப் பெரிய பொறுப்பு. என் மீது எனது கட்சி பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டில் உருவாகி வரும் சூழலை எதிா்கொள்வதிலும், மிகவும் ஆக்ரோஷமாக மாறிவிட்ட வலதுசாரி பாசிச, வகுப்புவாத சக்திகளிடம் இருந்துவரும் சவால்களை ஏற்றுக்கொள்வதிலும் நான் எவ்வாறு செயல்படப் போகிறேன் என்பதைப் பொருத்து அந்த நம்பிக்கை இருக்கும்’ என்று தெரிவித்தாா்.

மாநாட்டில், அமா்ஜீத் கெளா், கிரிஷ் சா்மா உள்ளிட்ட 11 போ் கொண்ட தேசிய செயற்குழுவும், 31 போ் கொண்ட தேசிய நிா்வாகக் குழுவும் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக இரா. முத்தரசன் தோ்வு செய்யப்பட்டாா்.

முதல் பட்டியலினத்தவா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக டி.ராஜா தோ்வு செய்யப்பட்டாா். இதன்மூலம், அந்தப் பொறுப்புக்குத் தோ்வு செய்யப்பட்ட முதல் பட்டியலினத்தவா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.

இந்த மாநாட்டில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் அறிவுஜீவிகள், மாணவா் தலைவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கைது செய்யப்பட்டவா்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அவா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக-ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் தீவிரப்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் பிகாா், தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல்களில் இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சாா்பற்ற சக்திகள் வெற்றி பெற பாடுபடவும் அக்கட்சி உறுதியேற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.