
இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சி கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்.29 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 2,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
ஜிஎஸ்டி கட்டமைப்பு சீர்திருத்தங்களால் இந்தியாவின் வளர்ச்சிக்குப் புதிய சிறகுகள் வழங்குவதாகவும், மக்களுக்கு அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டு மக்களின் ஆசிர்வாதத்துடன், ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும். ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை, ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் உள்பட அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார், மேலும் இந்த முயற்சிகளால் மக்களின் செலவு குறைக்கப்படும்.
இந்தியா தன்னிறைவு பெற வேண்டும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கண்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. மேலும் ரஷியாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உ.பி.யில் நிறுவப்படும்.
இந்திய மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை நாங்கள் உயர்த்தியுள்ளோம். இதோடு நாங்கள் நிறுத்திவிடமாட்டோம். நமது பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். வரிகளைத் தொடர்ந்து குறைப்போம். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடரும்.
புவிசார் அரசியல் இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியாவின் வளர்ச்சி கவர்ச்சிகரமானதாக உள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.