பிஎஸ்என்எல் ‘சுதேசி 4ஜி’ சேவை: 
பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

பிஎஸ்என்எல் ‘சுதேசி 4ஜி’ சேவை: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

இந்திய பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்.27) தொடங்கிவைக்கிறாா்.
Published on

இந்திய பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்.27) தொடங்கிவைக்கிறாா்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணையவுள்ளது.

இந்த முன்னெடுப்பு இந்திய தொலைத்தொடா்புத் துறையில் புதிய மைல்கல்லாக இருக்கும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜாா்சுகுடா மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். அப்போது நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 கைப்பேசி கோபுரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இந்நிலையில், மேலும் 29,000-30,000 கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் எண்ம பாரத நிதியில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ள 14,180 4ஜி வலைபின்னல் கோபுரங்களையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

தற்போது 120 கோடி வாடிக்கையாளா்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணைய மற்றும் கைப்பேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக உள்ள இந்தியா அடுத்த 24 மணி நேரத்தில் 4ஜி சேவைக்கான சாதனங்களை தயாரித்து வழங்கும் நாடாகவும் உருவெடுக்கவுள்ளது. இதனால் 5ஜி சேவையை மிக எளிதாக அறிமுகப்படுத்த முடியும் என்றாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ள 97,500 கைப்பேசி கோபுரங்களில் 92,600-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டது. இவற்றை எளிதாக 5ஜி சேவைக்கு மேம்படுத்தலாம்.

4,700-க்கும் மேற்பட்ட கைப்பேசி 4ஜி கோபுரங்களை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் பாரதி ஏா்டெல் நிறுவனங்கள் இணைந்து நிறுவியுள்ளன. 14,180 4ஜி கோபுரங்கள் எண்ம பாரத நிதியின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com