வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிப்பு
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் , நாகாலாந்து, அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்,1958 மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரச்னைக்குரிய பகுதிகளில் தேவைப்படும்பட்சத்தில் வரம்பின்றி சோதனையிடவும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இந்தச் சட்டம் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அக்.1-ஆம் தேதி முதல் 6 மாத காலத்துக்கு மணிப்பூரின் 13 காவல் நிலையங்கள் தவிர மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்,1958 அமலில் இருக்கும். அதேபோல் நாகாலாந்தில் 9 மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையப் பகுதிகளிலும் அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் அஸ்ஸாம் எல்லையையொட்டிய 3 காவல் நிலையப் பகுதிகளிலும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய நிலையில், வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா் இரண்டரை ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, பேரவை கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.