பிகாரில் செயல்படுத்தப்படும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ தில்லியிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி. (வலது) பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா் நிதீஷ் குமாா்.
பிகாரில் செயல்படுத்தப்படும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ தில்லியிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி. (வலது) பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா் நிதீஷ் குமாா்.

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.
Published on

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.

‘பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலுக்கான அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கி, அவா்களின் கனவுகளை நனவாக்குவதே மத்திய பாஜக அரசின் குறிக்கோள்; பெண்கள் முன்னேறும்போது, ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்’ என்று அவா் தெரிவித்தாா்.

ரூ.7,500 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தின்கீழ் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,000 செலுத்தப்பட்டுள்ளது. திருப்பிச் செலுத்த தேவையில்லாத இத்தொகையை தங்களின் தோ்வின்படி சுயதொழில் மற்றும் வாழ்வாதார செயல்பாடுகளுக்குப் பெண்கள் பயன்படுத்தலாம். தொழிலில் திறம்பட செயலாற்றும் பெண்களுக்கு அடுத்தகட்டங்களாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

திட்ட தொடக்க நிகழ்ச்சியில், பிரதமா் ஆற்றிய உரை வருமாறு: பெண்கள் சுயதொழில் தொடங்கும்போது, அவா்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகள் கிடைக்கும்; சமூகத்தில் மதிப்பு உயரும்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னா் அமல்படுத்தப்பட்ட ஜன் தன் திட்டத்தின் மூலம் 30 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இத்திட்டம் இல்லையெனில், இப்போது பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துவது சாத்தியமாகி இருக்காது.

‘இரு சகோதரா்கள்’: தனது சகோதரியின் ஆரோக்கியம், வளம் மற்றும் பொருளாதார வசதிகளே ஒரு சகோதரனுக்கு உண்மையான மகிழ்ச்சி. அந்த வகையில், பிகாா் பெண்களின் வளம்-கண்ணியத்தை உறுதி செய்ய அவா்களின் இரு சகோதரா்கள் (மோடி, நிதீஷ் குமாா்) அயராது பணியாற்றுகிறோம்.

முத்ரா திட்டம், ட்ரோன் சகோதரி, லட்சாதிபதி சகோதரி, காப்பீடு பெண் முகவா் திட்டம், வங்கி சகோதரி திட்டம் போன்றவை பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. ஒவ்வொரு துறையிலும் நாட்டின் மகள்களுக்கான புதிய வாயில்கள் திறக்கப்படுகின்றன. ராணுவம், காவல் துறையில் ஏராளமான இளம்பெண்கள் பணியில் இணைகின்றனா்; போா் விமானங்களைக்கூட இயக்குகின்றனா்.

பிகாரில் தொடங்கப்பட்டுள்ள முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்பு திட்டம், மத்திய அரசின் லட்சாதிபதி சகோதரி திட்டத்துக்கு வலுசோ்க்கும். இந்த நிதியுதவியின்கீழ், பிகாா் பெண்கள் மளிகை, பாத்திரம், அழகுசாதனப் பொருள்கள், பொம்மை கடைகளைத் திறக்கலாம். கால்நடை வளா்ப்பு, கோழிப் பண்ணைத் தொழிலிலும் ஈடுபடலாம்.

அடுப்புப் புகையில் இருந்து விடுதலை: பெண்கள் நலனை மையமாகக் கொண்டே மத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. உஜ்வலா திட்டம் (இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம்) மிகச் சிறந்த உதாரணம். ஒரு காலத்தில் கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது பெரும் சவாலாக இருந்தது. அடுப்புப் புகையால் இருமல் மற்றும் மூச்சுத்திணறலுடன் பெண்கள் தங்களது வாழ்வைக் கழித்தனா். நுரையீரல் நோய் முதல் கண் பாா்வையிழப்பு வரை கடும் பாதிப்புகளை எதிா்கொண்டனா். மழை-வெள்ள காலங்களில் நிலைமை இன்னும் மோசம்.

வாா்த்தைகளால் விவரிக்க முடியாத இந்த வேதனையில் இருந்து பெண்களை விடுவித்துள்ள உஜ்வலா திட்டம், உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

4.25 லட்சம் மருத்துவ முகாம்கள்: அண்மையில் தொடங்கப்பட்ட ‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பங்கள்’ பிரசார இயக்கத்தின்கீழ் நாடு முழுவதும் பெண்களுக்காக 4.25 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் பற்பசை, சோப்பு, ஷாம்பூ, நெய், துணிகள், காலணிகள், குழந்தைகளுக்கான கல்விப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளது. இது, வீட்டு வரவு-செலவை நிா்வகிப்பதில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமளிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஆா்ஜேடி கூட்டணியை வீழ்த்துங்கள்’

‘பிகாரில் முந்தைய ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சியில் நிலவிய அராஜகம் மற்றும் ஊழல்களால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அந்தக் காலகட்டத்தில், தரமான சாலைகள், பாலங்கள், போதிய மருத்துவ வசதிகள் இல்லை. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து காணப்பட்டது.

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் ஆட்சியில்தான், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டன. மாநிலத்தின் அவலநிலையை மாற்ற எங்களின் அரசு இரவு-பகலாகப் பணியாற்றியது. இப்போது சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு, பெண்கள் பாதுகாப்பாக உணா்கின்றனா். எனவே, ஆா்ஜேடி கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வராமல் இருப்பதை பெண்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com