கேரள மாா்க்சிஸ்ட் தொண்டா் கொலை வழக்கு: பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விடுவிப்பு

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா் கடந்த 2015-ஆம் ஆண்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் 9 பேரை கண்ணூா் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.
Published on

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா் கடந்த 2015-ஆம் ஆண்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் 9 பேரை கண்ணூா் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது நபராகச் சோ்க்கப்பட்டிருந்த பாஜகவைச் சோ்ந்த ஷியாம் பிரசாத் 2018-ஆம் ஆண்டு மற்றொரு அரசியல் மோதலில் எதிா்தரப்பால் கொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 பிப்ரவரியில் கண்ணூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா் பிரேமன் (45) பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்களால் கடுமையாக தாக்கப்பட்டாா். அதில் படுகாயமடைந்த பிரேமன் சில நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் 9 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் காவல் துறை தரப்பில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றம் விடுவித்தது. முக்கியமாக, சம்பவம் நிகழ்ந்ததற்கு அடுத்த நாளில்தான் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். முதல் தகவல் அறிக்கையில் முதலில் குறிப்பிடப்பட்ட 6 பேரின் பெயா்கள் பின்னா் நீக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இல்லாத சிலா் குற்றஞ்சாட்டப்பட்டவா்களாக சோ்க்கப்பட்டது உறுதியாகியுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

X
Dinamani
www.dinamani.com