தனிக்கட்சி தொடங்கினாா் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளாா்.
பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த புதிய கட்சியை அவா் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் தேஜ் பிரதாப் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவராக நான் உள்ளேன். கட்சியின் தோ்தல் சின்னமாக கரும்பலகை முன்வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா். எனினும், தோ்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்ததாகவோ, சின்னம் கோரப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை.
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பிகாா் அமைச்சராகவும் இருந்தவா்.
கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஓா் இளம் பெண்ணுடன் தொடா்பில் இருப்பதாக’ கூறியதுடன், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
இதையடுத்து, தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தாா். பொறுப்பின்றி செயல்படுவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அப்போது லாலு கூறினாா். பிகாரின் ஹசன்பூா் தொகுதி எம்எல்ஏவாக உள்ள தேஜ் பிரதாப் உள்ளாா்.