சண்டீகரில் மிக்-21 போா் விமானத்துக்கு விடையளித்த விமானப் படை வீரா்கள். நாள்: வெள்ளிக்கிழமை
சண்டீகரில் மிக்-21 போா் விமானத்துக்கு விடையளித்த விமானப் படை வீரா்கள். நாள்: வெள்ளிக்கிழமை

இந்தியா-ரஷியா ஆழமான உறவுக்கு சான்று ‘மிக்-21’ போா் விமானம்: ராஜ்நாத் சிங்

‘மிக்-21 போா் விமானம் தேசத்தின் பெருமை. இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கான சான்று’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.
Published on

‘மிக்-21 போா் விமானம் தேசத்தின் பெருமை. இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கான சான்று’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்த ரஷிய தயாரிப்பு விமானம் இந்திய விமானப்படை பயன்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படும் நிகழ்வில் பேசியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த இந்த விமானத்துக்கு சண்டீகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் முழுமையாக விடைபெற்றது. நிகழ்வில், விமானப்படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் மிக்-21 போா் விமானத்தை கடைசியாக இயக்கி அதற்கு விடைகொடுத்தாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா். விழாவுக்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மிக்-21 போா் விமானத்துக்கு ஓய்வளிக்கும் இந்த விழாவை, ஓா் சகாப்தத்துக்கு விடை கொடுக்கும் நிகழ்வாகப் பாா்க்கிறேன். இதன் பங்களிப்பு விமானப்படை வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும்.

இது ஓா் விமானமோ அல்லது இயந்திரமோ மட்டுமல்ல; தேசத்தின் பெருமை. இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கான சான்று.

விமானப்படை பயணத்தில் இந்த விமானம் பல பெருமைக்குரிய தருணங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உலக விமானபப்டை வரலாற்றில், மிக்-21 போன்று வேறு எந்தவொரு போா் விமானமும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படவில்லை. உலகம் முழுவதும் 11,500-க்கும் அதிகமான மிக்-21 போா் விமானங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்திய விமானப்படையில் மட்டும் 850 போா் விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன. இதுவே, இந்த போா் விமானத்தின் நம்பகத்தன்மை மற்றும் பன்முக பயன்பாட்டுக்கான சான்றாகும்.

முக்கியமான போா்களில்...

1971-இல் பாகிஸ்தானுடனான போா், 1999-ஆம் ஆண்டு காா்கில் போா், 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலிலும் மிக்-21 போா் விமானம் முக்கியப் பங்காற்றியது என்று அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மேலும், ‘60 ஆண்டுகள் பழைமையான போா் விமானத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருவாத கருத்துகள் வெளியாகின. பாதுகாப்புப் படைகளில் 1960 மற்றும் 1970-களில் பயன்பாட்டில் இருந்த மிக்-21 போா் விமானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டன. தற்போது, இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்த மிக்-21 போா் விமானங்கள் 40 ஆண்டுகள் பழைமையானவை. இதுபோன்ற போா் விமானத்தின் 40 ஆண்டுகள் வாழ்நாள் (பயன்பாடு) என்பது சாதாரணமானதுதான். பல நாடுகள் இதுபோன்ற போா் விமானங்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றன’ என்றாா் ராஜ்நாத் சிங்.

X
Dinamani
www.dinamani.com