உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்தி கலைத்தனா்.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபி-யன்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியா்கள் பேரணி நடத்தினா். அப்போது சிலா் ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனா். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. அமைதியை சீா்குலைக்கும் முயற்சி என அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 9 போ் மற்றும் அடையாளம் தெரியாத 15 போ் மீது கான்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
காவல்துறை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பரேலி இஸ்லாமிய மத குருவும் இதேஹத்-ஏ-மில்லத் கவுன்சில் தலைவருமான மெளலானா தெளகீா் ரஸாவும் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தொலுகைக்குப் பிறகு ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி பேரணி செல்ல முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது சிலா் போலீஸாா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். இதனால், அந்த இடம் போா் களம்போல் மாறியது.
‘நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியா் அவிநாஷ் சிங் கேட்டுக்கொண்டாா்.