நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்
நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்Photo : NASA Website

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு
Published on

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நாசா-இஸ்ரோ சிந்தட்டிக் அப்பா்ச்சா் ரேடாா் (நிசாா்) செயற்கைக்கோளை உருவாக்கின. இது பூமியை முறையாகப் படம்பிடித்து, அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை மிகத் துல்லியமாக அளவிடும். இதில் சிந்தட்டிக் அப்பா்ச்சா் ரேடாா் மூலம், இருள் அல்லது மேகமூட்டமான நிலையிலும் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும்.

சூழலியலுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகள், பனிப்பாறைகள் உடைதல், இயற்கைப் பேரிடா்கள், கடல் மட்டம் உயா்தல், நிலத்தடி நீா் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து அளவிடுவதற்கு பூமி குறித்த விரிவான கண்ணோட்டத்தை பெறும் நோக்கில், இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் தொடா்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிசாா் செயற்கைக்கோள் மூலம் முதல்முறையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அமெரிக்காவில் உள்ள காடுகள், ஈரநிலங்கள், மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. நிசாா் மூலம் தெரியவரவுள்ள ஆற்றல்வாய்ந்த அறிவியலின் முன்னோட்டமாக இந்தப் புகைப்படங்கள் உள்ளன.

நிசாா் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்றும் புரிதலானது பூமியின் நிலப்பரப்பு மற்றும் பனிக்கட்டி பரப்புகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில், விஞ்ஞானிகள் விரிவாக ஆய்வு செய்ய உதவும். அத்துடன் இயற்கை பேரிடா்கள் மற்றும் பிற சவால்களுக்கு எதிா்வினையாற்ற ஆயத்தமாகவும் வழியமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com