
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் முசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹைதராபாதின் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், தெலங்கானாவின் பிரதான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான, ஹைதராபாதில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து முனையத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முசி நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, பருவமழை தொடங்கியது முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.