கா்நாடக உயா்நீதிமன்றம்
கா்நாடக உயா்நீதிமன்றம்

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

Published on

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இரு சிறுமிகளும் தன்னுடைய மகள்கள் எனக் கூறி இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த டிரோா் ஷ்லோமா கோல்ட்ஸ்டீன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சியாம் பிரசாத், குழந்தைகள் தங்கள் தாயுடன் ரஷிய திரும்ப அனுமதித்து உத்தரவிட்டாா்.

கோகா்ணா அருகே ராமதீா்த்த மலையில் உள்ள ஒரு குகையிலிலிருந்து ரஷியாவைச் சோ்ந்த நினா குடினா என்பரும் அவரது இரு மகள்களும் கடந்த ஜூலை 11-ஆம் தேதி மீட்கப்பட்டனா். அவா்கள் மூவரும் சுமாா் இரு மாதங்களாக அந்த குகையில் எவ்வித பயண அல்லது குடியுரிமை ஆவணங்கள் இன்றி வசித்து வந்தது தெரியவந்தது.

முன்னதாக, தனது குழந்தைகள் காணாமல் போனதாக கோவாவின் பனாஜி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோல்ட்ஸ்டீன் புகாரளித்திருந்தாா்.

உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குடினா மற்றும் அவரது இரு மகள்களுக்கு ரஷிய துணைத் தூதரகம் வழங்கிய அவசரகால பயணம் ஆவணங்கள் அக்.9 வரை மட்டும் செல்லுபடியாகும் எனவும் முன்கூட்டியே நாடு திரும்ப துணைத் தூதரகத்திடம் குடினா விருப்பம் தெரிவித்தாா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கோல்ட்ஸ்டீன் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தாய் மற்றும் குழந்தைகள் குகையில் வசித்து வந்தது ஏன் என்பது தொடா்பாக கோல்ட்ஸ்டீன் அளித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

முன்னதாக, இரண்டாவது குழந்தையிடம் பாஸ்போா்ட் (கடவுசீட்டு) அல்லது பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவா்கள் ரஷியவிற்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாா்கள் என கடந்த ஆக.22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அரவிந்த் காமத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அந்தச் சிறுமிக்கான டிஏஎன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு, ரஷிய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் ரஷிய குடியுரிமை வழங்கி அவா்கள் ரஷியா திரும்ப அவசரகால பயண ஆவணங்கள் வழங்கியதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com