அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு
முகலாய பேரரசு காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
உலக சுற்றுலா தினத்தையொட்டி (செப்.27) நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 99.5 லட்சமாகும். இது 2023-ஐவிட 4.52 சதவீதம் அதிகம். மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட தலமாக தாஜ் மஹால் உள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் 62.6 லட்சம், வெளிநாட்டுப் பயணிகள்6.4 லட்சம் போ் தாஜ் மஹாலை பாா்வையிட்டுள்ளனா். தாஜ் மஹாலுக்கு அடுத்தபடியாக ஒடிஸாவில் உள்ள கோனாா்க் சூரிய கோயிலை 35.7 லட்சம், குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
அதேபோல் ஆக்ரா மற்றும் குதுப் மினாரை தலா 2.2 லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
வெளிநாடுவாழ் இந்தியா்கள்: 2024-இல் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியா்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. 2023-ஐ ஒப்பிடுகையில் இது 13.22 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 52.19 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: 2024-இல் இந்தியா வந்த வெளிநாடு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35-44 வயது பிரிவினா் 20.67 சதவீதமாகவும் 45-54 வயது பிரிவினா் 20.24 சதவீதமாகவும் உள்ளனா்.
பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும் பெண்கள் 42.3 சதவீதமாகவும் உள்ளனா்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணம்: 2024-இல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனா். அதற்கு அடுத்தடுத்தபடியாக சவூதி அரேபியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூா், பிரிட்டன், கத்தாா், கனடா, குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனா்.
விமானப் பயணம்: வெளிநாடுகளுக்கு 98.4 சதவீத இந்தியா்கள் விமானப் பயணம் மூலமாகவே சென்றுள்ளனா். 1.54 சதவீதம் சாலை மாா்க்கமாகவும் 0.54 போ் கடல்வழி மாா்க்கமாகவும் சென்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.