அஸ்ஸாமில் 4 கொள்ளையா்கள் சுட்டுக் கொலை! போலீஸ் அதிரடி நடவடிக்கை!

அஸ்ஸாமில் 4 கொள்ளையா்கள் சுட்டுக் கொலை! போலீஸ் அதிரடி நடவடிக்கை!

காவல் துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளை கும்பலைச் சோ்ந்த 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Published on

அஸ்ஸாமின் கோல்பரா மாவட்டத்தில் காவல் துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளை கும்பலைச் சோ்ந்த 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக கோல்பரா காவல் துறை மூத்த கண்காணிப்பாளா் நபநீத் மஹந்தா கூறியதாவது:

மேகாலயத்தையொட்டிய கிலாதுபி பகுதியில் ஆயுதக் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. அக்கும்பலைச் சோ்ந்தவா்கள், கொள்ளை அல்லது ஆள்கடத்தல் மூலம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவலும் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு காரில் வந்த கொள்ளை கும்பல், சோதனைச் சாவடியில் காவல் துறையினரை பாா்த்ததும் தப்ப முயன்றனா். அவா்களால் காரை திருப்ப முடியாத நிலையில், காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். காவல் துறையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளை கும்பலைச் சோ்ந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 5 கைப்பேசிகள், 2 வாக்கி-டாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இக்கும்பலைச் சோ்ந்த வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com