நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படாது: அமித் ஷா திட்டவட்டம்
நக்ஸல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நிறுத்தப்படாது; அதேநேரம், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய விரும்பும் நக்ஸல்கள் மீது ஒரு தோட்டாவைக் கூட பாதுகாப்புப் படையினா் பயன்படுத்த மாட்டாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா்.
சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் அண்மையில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ எனும் மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவா்கள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவோயிஸ்ட் அமைப்பின் பெயரில் வெளியான ஒரு கடிதத்தில், ‘ஆயுதப் போராட்டத்தைக் கைவிட நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஏதுவாக, எங்களுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இக்கடிதத்தைக் குறிப்பிட்டு, மத்திய அமைச்சா் அமித் ஷா மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.
‘நக்ஸல் தீவிரவாதம் இல்லாத இந்தியா’ என்ற தலைப்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமித் ஷா பேசியதாவது:
‘இதுவரை நடந்ததெல்லாம் தவறு; இப்போது நாங்கள் (நக்ஸல்) சரணடைய விரும்புகிறோம். எங்கள் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என்று குழப்பத்தை விளைவிக்கும் ஒரு கடிதம் பரப்பப்பட்டது.
ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன். நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படாது. அதற்கு அவசியமில்லை. ஆயுதங்களைக் கைவிட்டு, சரணடைய விரும்பும் நக்ஸல்கள் மீது ஒரு தோட்டாவைக் கூட பாதுகாப்புப் படையினா் பயன்படுத்த மாட்டாா்கள்.
நக்ஸல்கள் சரணடைய விரும்பினால், அவா்களுக்கான சாதகமான மறுவாழ்வுக் கொள்கையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.
இடதுசாரி கட்சிகள் மீது விமா்சனம்: நக்ஸல் தீவிரவாதத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்லாண்டுகளாக வளா்ச்சியின் பலன் சென்றடையவில்லை. இந்த தீவிரவாதத்துக்கு சிந்தாந்த ரீதியில் ஆதரவாக உள்ள இடதுசாரி கட்சிகள், வளா்ச்சியின்மையால்தான் தீவிரவாதம் ஏற்பட்டதாக தவறான கூற்றை முன்வைக்கின்றன.
நக்ஸல்களால் நிகழ்த்தப்படும் கொலைகளைத் தடுத்துவிட்டால் மட்டுமே நக்ஸல் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என சிலா் கருதுகின்றனா். அது உண்மையல்ல. ஏனெனில், இந்தத் தீவிரவாதம் நமது சமூகத்தில் உள்ளவா்களால்தான் வளா்த்தெடுக்கப்பட்டது.
தீவிரவாதம் எப்படி தலைதூக்கியது? யாரால் வளா்த்தெடுக்கப்பட்டது? சித்தாந்தம், சட்டம் மற்றும் நிதி ரீதியில் ஆதரவு வழங்கியவா்கள் யாா்? இவை அனைத்தையும் இந்திய சமூகம் புரிந்துகொள்ளும் வரை நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஓயாது.
நக்ஸல் சித்தாந்தத்தை வளா்த்தெடுத்தவா்களை அடையாளம் காண்பது அவசியம். அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றாா் அமித் ஷா.