சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் இந்திர கல்யாண் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கான்கோ்-கரியாபாத் மாவட்ட எல்லை ஒட்டிய மலைப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நக்ஸல் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவினா் மாவட்ட ரிசா்வ் காவல்படையினா் இணைந்து மலையடிவார வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அவா்களில் ஒருவா் அந்த பிராந்திய நக்ஸல் அமைப்பின் செயலராக இருந்த சரவண் மத்கம் என்ற விஸ்வநாதன், பிராந்திய நக்ஸல் குழு உறுப்பினா் ராகேஷ் ஹெம்லா, பெண் நக்ஸல் வசந்தி குனாக்ஜம் என அடையாளம் காணப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடைய இவா்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.