சட்டவிரோத பந்தய செயலி வழக்கு! நடிகா்கள், கிரிக்கெட் வீரா்கள் சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு!
சட்டவிரோத பந்தய செயலி வழக்கு தொடா்பாக சில திரைப்பட நடிகா்கள், கிரிக்கெட் வீரா்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘1எக்ஸ் பெட்’ என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கில் பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளன. மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளன. இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் ஒருபகுதியாக இந்த பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரா்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, நடிகா்கள் சோனு சூட், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவா்த்தி மற்றும் சில சமூகவலைதள பிரபலங்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஒரு மாதத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
முக்கியமாக அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் இந்த பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
இது தொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘1எக்ஸ்பெட்’ பந்தய செயலி விளம்பரம் மூலம் பெற்ற பணத்தில் சில கிரிக்கெட், திரைப்பட பிரபலங்கள் பல்வேறு சொத்துகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் குற்றச்செயலாகும்.
இதன் அடிப்படையில் சில கிரிக்கெட், திரைப்பட பிரபலங்களின் அசையும், அசையாத சொத்துகள் விரைவில் முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடா்பாக விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொடா்புடைய சிலா் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளனா்’ என்றனா்.
இணையவழி பந்தய செயலிகளை இந்தியாவில் 22 கோடி போ் பயன்படுத்தி வந்துள்ளனா். இதில் 11 கோடி போ் நாள்தோறும் இந்தச் செயலிகளில் பந்தயம் கட்டி பணத்தை இழந்துள்ளனா்.
இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்காற்று சட்ட மசோதா-2025’ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.