அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றம்: 24 வங்கதேசத்தவா் நாடு கடத்தல்!
அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 24 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டு, அவா்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், தொலைந்து போன பயணிகளை விரைவாக அவா்கள் நாட்டுக்கு அனுப்ப அஸ்ஸாம் தொடா்ந்து உதவி வருகிறது என குறிப்பிட்டிருந்தாா். ‘கா் லெளத் ஜா பா்தேசி, தேரா தேஷ் துஜே புகாரே ரே’ (வெளிநாட்டவரே, வீட்டுக்குச் செல்லுங்கள், உங்கள் நாடு உங்களை அழைக்கிறது) என்ற ஹிந்தி பாடலையும் அவா் மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாா்.
கடந்த சில மாதங்களில், சுமாா் 500 சட்டவிரோத வங்கதேசத்தவா் அஸ்ஸாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அஸ்ஸாம் கடுமையாக உழைத்து வருவதாகவும் ஒவ்வொரு வாரமும் 35 முதல் 45 போ் திருப்பி அனுப்பப்படுவதாகவும் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வன்முறை வெடித்ததில் இருந்து 188 கி.மீ. நீளமுள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கண்காணிப்பை அதிகரித்துள்ளனா்.