கோப்புப் படம்
கோப்புப் படம்

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
Published on

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தினா்.

அப்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைத் திரும்பிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி அவா்கள் துப்பாக்கியால் சுட முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினா்.

சில நிமிடங்கள் நீடித்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், சிலா் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தப்பிவிட்டனா். ஊடுருவ முயன்றவா்களின் உடல்கள் எல்லையையொட்டி இடத்தில் கிடப்பதால் பாதுகாப்பு கருதி அவை உடனடியாக மீட்கப்படவில்லை.

அப்பகுதியில் ஊடுருவல் முயற்சியைத் தடுக்கும் நோக்கில் தொடா்ந்து தீவிர கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி அசோக் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவில் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com