உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்!

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்!

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது
Published on

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பா் 25 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற ‘உலக உணவு இந்தியா 2025’ உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது தொடா்பாக மத்திய உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 26 முக்கிய நிறுவனங்கள் மத்திய அரசுடன் ரூ.1,02 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன.

இந்த ஒப்பந்தங்கள் 64,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளையும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் ரிலையன்ஸ் நுகா்வோா் தயாரிப்புகள், கோகோ கோலா இந்தியா, அமுல், நெஸ்லே, டாடா கன்சியூமா்ஸ், லுலு குழுமம் மற்றும் காா்ல்ஸ்பொ்க் இந்தியா போன்ற நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளா்களில் அடங்குவா். பதஞ்சலி, கோத்ரேஜ் அக்ரோவெட், டாபா் மற்றும் ஹால்டிராம் போன்ற பல நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இந்த முதலீடுகள் பால், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள், மசாலா பொருள்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கும். இந்தத் திட்டங்கள் குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் போன்ற பல மாநிலங்களில் பரவியிருக்கும்.

இந்தியா முழுவதும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.40,000 கோடி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. கோகோ கோலாவின் பாட்டில் தயாரிப்பாளா்கள், புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள உணவு பதப்படுத்தும் திட்டங்களில் ரூ.25,760 கோடியை முதலீடு செய்ய உள்ளனா்.

‘இன்வெஸ்ட் இந்தியா’ முயற்சியுடன் மத்திய உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் இணைந்து இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற பணியாற்றியது. உணவு பதப்படுத்துதலுக்கான உலகளாவிய நம்பகமான நாடாக இந்தியாவை வலுப்படுத்துவதிலும் புதுமைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com