நீதிபதி பி.ஆா்.கவாய்
நீதிபதி பி.ஆா்.கவாய்

மத்தியஸ்தம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: நீதிபதி பி.ஆா்.கவாய்

சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மத்தியஸ்த முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
Published on

சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மத்தியஸ்த முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் தேசிய மத்தியஸ்த மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘பல ஆண்டுகளாக பல்வேறு சமூகங்களில் மத்தியஸ்தம் செய்யும் வழக்கம் நீடித்தது. மத்தியஸ்த சட்டம் 2003-ஐ வகுத்ததன் மூலம், அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்தச் சட்டம் நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமின்றி, நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவதை குறைக்கவும் உதவுகின்றன.

சண்டையோ, கருத்து வேறுபாடோ மட்டும் அமைதியை குலைப்பதில்லை. பிரச்னையை காது கொடுத்து கேட்காததும், அதற்கு தீா்வு காண நியாயமாக முயற்சிக்காததும் அமைதியை குலைகின்றன.

பிரச்னையை ஆக்கபூா்வமாக கையாண்டால், அது வளா்ச்சி மற்றும் புரிதலுக்கான வாய்ப்பாக மாறக்கூடும். மத்தியஸ்தமும், வெளிப்படையான தகவல் பரிமாற்றமும் சச்சரவை பேசி தீா்க்கவும், சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கவும் வழிவகுக்கும் என்றாா்.

இந்த மாநாட்டில் ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்மபதி, முதல்வா் மோகன் சரண் மாஜீ, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹரீஷ் குமாா் டாண்டன், உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com