வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு! பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு!

வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு! பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு!

வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்களை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா்...
Published on

வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்களை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா் என்ற எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இரு கூட்டணிகளுமே பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.

அண்மையில், பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். தொழிலில் சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு அடுத்தகட்டமாக ரூ.2 லட்சம் வரை வழங்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிகாா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக கூறியதாவது:

தோ்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இலவசத் திட்டங்களை முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்து வருகிறாா். அதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி தேவை. அந்த அளவுக்கு பிகாரில் அரசுக்கு வருவாய் இல்லை.

மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்த பல சிறந்த வாக்குறுதிகளை அப்படியே தனது வாக்குறுதியாக மாற்றி நிதீஷ் அறிவித்துள்ளாா். எனினும், எங்களிடம் மேலும் சில சிறந்த திட்டங்கள் உள்ளன. தோ்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு அதனை நாங்கள் மக்களிடம் தெரிவிப்போம்.

முன்பு, நிதீஷ் குமாா் தலைமையிலான ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இப்போது அவருக்கு வாக்குக் கேட்டு வருகிறாா். நிதீஷ் குமாருடன் பாஜக கைகோத்துள்ளது. இந்தக் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com